சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் புத்தாடைகள், பட்டாசுகள் விற்கும் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய கடைசி விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள துணிக்கடைகளில் புத்தாடைகள் வாங்க ஏராளமானோர் திரண்டனர்.
குறிப்பாக, சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த மக்களால் கடைகளில் வியாபாரம் களை கட்டியது.
ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து புத்தாடைகளை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பெரிய துணிக்கடைகள் மட்டுமல்லாமல், சாலையோரங்களில் துணிகளை விற்கும் சிறு கடைகளிலும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.
துணிக்கடைகள் மட்டுமல்லாமல் நகைக்கடைகள், மலிவு விலை அணிகலன்கள் விற்கும் கடைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். இதனால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புத்தாடை வாங்க வந்தவர்கள் அடுத்தகட்டமாக உணவகங்களுக்கும் சென்றனர். அங்கும்கூட மக்கள் வரிசையில் காத்திருந்து உணவருந்த வேண்டி இருந்தது.
இதற்கிடையே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னை காவல் துறை, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பல இடங்களில் உயர் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காணிப்புக் கருவிகள் மூலமாகவும் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
பெரும்பாலான காவலர்கள் சாதாரண உடையில் நடமாடி மக்கள் கூட்டத்தை கண்காணிப்பதாகவும் பெண் காவலர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள பிரபல துணிக்கடைகள் தற்போது காலை ஆறு மணிக்கு எல்லாம் விற்பனை தொடங்கி விடுகின்றனர்.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்தாலும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறையவில்லை என தினத்தந்தி ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.