சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடு களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு, தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு முப்பது மாதங்களில் 200 உலோக தெய்வச் சிலைகள், 100 கற்சிலைகள் என மொத்தம் 300 கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நூறு கலைப்பொருள்களும் மீட்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அண்மையில் திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வின்போது சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததாக தகவல் பரவியது. இது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி தரும் விதமாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு, காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று கூறப்படுவது போன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதாக தெரிவித்துள்ளார்.
வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்கிற ரீதியில் குற்றச்சாட்டுகளைச் சொல்வது சரியல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர் கடந்த 30 மாதங்களில் இந்து அறநிலையத் துறை பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.
“உளவுத்துறை நன்றாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளன. கோவிலில் பெட்ரோல் குண்டு வீசியவனை உடனடியாக கைது செய்துள்ளோம். உயரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைக் கூறினால் அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது,” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.