புதுடெல்லி: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை மோதல் நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்குத் தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டன.
காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீரைத் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீரைத் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை (நவம்பர் 23) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 90வது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2,700 கன அடி தண்ணீரைத் திறந்துவிடவும் நிலுவையில் உள்ள தண்ணீரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

