வேலூர்: சட்டவிரோதப் பணப்பரிமாற்றப் புகார் தொடர்பில் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு அமலாக்கத் துறை அழைப்பானை (சம்மன்) அனுப்பி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வெளிவந்தன.
இதையடுத்து அதிரடியாகக் களமிறங்கிய வருமானவரித்துறையினர், வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ரூ.10 லட்சம் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடுத்த சில நாள்களில் கதிர் ஆனந்தின் நெருங்கிய உறவினர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சகோதரி வீடு, சிமெண்ட் கிடங்கு ஆகிய இடங்களிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பதுக்கி வைத்திருந்த
ரூ.11.48 கோடி ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததை அடுத்து வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் மற்றொரு நாளில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், பணப் பரிமாற்றம் தொடர்பாக கதிர் ஆனந்தை விசாரணைக்கு அழைத்துள்ளது அமலாக்கத்துறை.
திமுக அமைச்சர்களை அடுத்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமலாக்க, வருமான வரித் துறைகளின் நடவடிக்கைகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.