திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் திருவிழாவையொட்டிய தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது.
காலை பிள்ளையார் தேரோட்டமும், மதியம் வள்ளி தெய்வானை சமேத முருகரின் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. இறுதியாக, மாலை சுமார் ஐந்து மணியளவில் ‘பெரியத் தேர்’ என அழைக்கப்படும் அண்ணாமலையார் தேரோட்டம் நடந்தது.
திருத்தேர் தனது வழக்கமான இடத்தில் இருந்து புறப்பட்டு சிறது தூரம் சென்றபோது அங்குள்ள சில கடைகளில் இருந்த பக்தர்கள் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதனால் அலறித் துடித்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தன் குழந்தைக்கு ஆபத்து ஏற்பட கூடாது என்பதற்காக ஒரு பெண்மணி முதல் மாடியில் இருந்து அதை தூக்கி வீசினார். மேலும், சிலர் இவ்வாறு மாடிகளில் இருந்து குதித்தனர். இந்நிலையில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். மின்சாரம் தாக்கியதால் உருவான பதற்றமான சூழலுக்கு மத்தியில் திருத்தேரோட்டம் மீண்டும் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
வழக்கத்தை விட நீண்டநேரத்திற்கு பிறகே தேரோட்டம் முடிவுக்கு வந்தது.


