மதுரை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதி ஜல்லிக்கட்டுக்குத் தயாராகி வருகிறது.
அங்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்காகவே புதிய திடல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் ஒரே சமயத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் புதிய திடல் அமைக்கப்படுகிறது.
உலகத்தரத்தில் உருவாகும் இந்தத் திடலுக்கு பார்வையாளர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனைக் கூடம், காளைகளைப் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்களுக்கான காத்திருப்பு அறை, கால்நடை மருத்துவமனை எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ரூ.44 கோடி செலவில் ஜல்லிக்கட்டு திடல் அமைக்கப்படுகிறது.
இதையடுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இந்தப் புதிய திடலில் அமர்ந்து ஒரே சமயத்தில் பத்தாயிரம் பேர் பார்த்து ரசிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அலங்காநல்லூருக்கு வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதிய திடலின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். அனைத்துப் பணிகளையும் விரைவாக முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.