தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர் மழை: மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு

2 mins read
79a42005-1e06-4873-9005-528ffd51fa52
சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியதால் வாகனமோட்டிகள் சிரமப்பட்டனர். - படம்: ஊடகம்

மதுரை: கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையை அடுத்து மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மதுரை விவேக நகர (ஸ்மார்ட் சிட்டி) சாலை தண்ணீரில் மூழ்கியது.

தற்போது தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவ மழையால் கடந்த சில நாள்களாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக அந்த அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

இதையடுத்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை வைகை ஆற்றில் ஏற்பட்ட ஆர்ப்பரிக்கும் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கரைபுரண்டு ஓடியதாக இந்து தமிழ் நாளேடு தெரிவிக்கிறது. மதுரையில் உள்ள யானைக்கல் தரைப்பாலம் மழை நீரில் மூழ்கியது. அருகே உள்ள தடுப்பணையில் ஆகாயத் தாமரைச் செடிகள் அதிகமாக இருந்ததால் தடுப்பணையை மீறி தண்ணீர் செல்ல முடியவில்லை. இதனால் ஆற்று நீர் அருகே உள்ள கரையோர சாலைகளுக்குள் புகுந்தது.

குறிப்பாக ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பகுதி வெள்ளத்தில் மூழ்கிப் போனதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்து ஊடகச் செய்தி மேலும் தெரிவித்தது.

வேகமாக செல்லும் தண்ணீரை பொருட்படுத்தாமல் தரைப்பாலத்தைக் கடக்க முயன்ற கார்களும் இருசக்கர வாகனங்களும் பழுதடைந்து நின்றன. நீண்ட நாள்களுக்கு பிறகு வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. காவல் துறையின் எச்சரிக்கையையும் மீறி நூற்றுக்கணக்கானோர் ஆற்றின் இரு கரைகளிலும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

இதற்கிடையே மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் மழை வெளுத்து கட்டி வருகிறது. நெல்லையில் மழையின் அளவைப் பொருத்து அந்தந்த பள்ளி நிர்வாகங்களே விடுமுறை அறிவிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழையால் 68 வீடுகள் சேதமடைந்துள்ளன. கோவில்பட்டி அருகே உள்ள கழுகு மலைப் பகுதியில் சுமார் 250 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் மழை நீரில் மூழ்கிப் போயின. இதேபோல் கமுதி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் அளவிலான பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்புச் சொற்கள்