சென்னை: கடந்த சில நாள்களாக நீடித்து வரும் கனமழை காரணமாக சென்னையின் நீர் ஆதாரங்களாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மிக விரைவில் இவ்விரு ஏரிகளின் நீர்மட்டம் அவற்றின் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்த சில மாதங்களுக்குத் தண்ணீர் பிரச்சினை இருக்காது என சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடையும் அதே வேளையில், வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இரு ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டிப்பிடிக்கும்போது பாதுகாப்புக் கருதி அவற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதையும் கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. மழை சார்ந்த விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், கடலில் சூறாவளிக் காற்று வீசும் எனப் பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சென்னையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளின் நீர் இருப்பும் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் அடையாறு கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதும் அதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அல்லல்படுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே இந்த ஆண்டும் வீடு களுக்குள் வெள்ளம் புகுந்துவிடுமோ என்ற கவலையில் மக்கள் உள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
தொடர்புடைய செய்திகள்
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 21.20 அடியில் தற்போது 18.89 அடியாக நீர் இருப்பு உள்ளது என்றும் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 18.86 அடியில் தற்போது 16.05 அடியாக நீர் இருப்பு உள்ளது என்றும் ஏஷியா நெட் தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
“செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவு 24 அடியாகும். தற்போது நீர் இருப்பு 22.19 அடியாக உள்ளது. இதேபோல் பூண்டி அணையின் முழுக் கொள்ளளவு 35 அடி. நீர் இருப்பு 30 அடியாக உள்ளது.
“அடுத்த ஓரிரு நாள்களில் பெய்யக்கூடிய மழையின் அளவைப் பொறுத்து ஏரிகளில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது தொடர்பாக முடிவெடுக்கப் படும்,” என பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுப்பர் என்று ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் திங்கட்கிழமையான நேற்றும் பரவலாக மழை பெய்தது.

