சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு இடைக்காலப் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 2017ஆம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனுக்களை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் தொடர்ச்சியாக நடந்தது.
அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், “கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த அதிமுகபொதுக்குழு கட்சி விதிகளின்படி கூட்டப்படவில்லை. அந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளராக பதவி வகித்த சசிகலாவை நீக்கியது தன்னிச்சையான முடிவு. சசிகலா தற்போது வரை அதிமுகவின் உறுப்பினர்,” என வாதிட்டிருந்தார்.
அதனை எதிர்த்து அதிமுக தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் உள்ளிட்டோர், “2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
“அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்கெனவே அங்கீகரித்துள்ளன. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல,” என வாதிட்டனர். இதேபோல ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச். அரவிந்த்பாண்டியன் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வி.கே.சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லுமா செல்லாதா என்பது குறித்து நீதிபதிகள் திங்கட்கிழமை (டிசம்பர் 4) தீர்ப்பளிக்கவுள்ளனர்.

