பூந்தமல்லி: மிச்சாங் புயல் காரணமாக சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளும் தெருக்களும் வெள்ளத்தில் தத்தளித்தன.
வீடுகளைச் சுற்றி தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும் பணியில் கடந்த இரு நாள்களாக ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக் கோரியும் மின் இணைப்பு, உணவு வழங்கக் கோரியும் சென்னையின் பல இடங்களிலும் கடந்த இரு நாள்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி, மேல்மாநகர் பகுதியில் வீடுகளைச் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
வெள்ள நிவாரணப் பணிகளை நகராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை என்று கூறி பெண்கள் உள்பட ஏறக்குறைய 200க்கும் மேலானோர் வியாழக்கிழமை காலை பூந்தமல்லி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காவலர்களும் நகராட்சி அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “மழை விட்டு 4 நாள்கள் ஆகியும் எங்கள் பகுதியில் மழைநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் இடத்தில் உங்களை வைத்துப் பார்த்தால்தான் எங்கள் வேதனை புரியும்,” என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மழைநீரை உடனே அகற்றி, மின் விநியோகம் வழங்கக் கோரி லஸ் கார்னர் பகுதியில் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி மறியல் செய்தனர்.
வியாசர்பாடியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழை நீரை 3 நாள்களாக அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து மீது அப்பகுதி மக்கள் கற்களை வீசி ரகளை செய்தனர். இதுகுறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், வண்ணாரப்பேட்டையில் மழைநீர் அகற்றப்படாமல் இருந்ததைக் கண்டித்து கல்லறை சாலை, லாலாகுண்டா, சீனிவாசபுரம், கோஜராஜநகர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தப் பகுதியை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள், தண்ணீரை உடனடியாக அகற்றி, மின்சார இணைப்பைக் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
மழைநீர் அகற்றப்பட்டு, மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல், திருவான்மியூர் சந்திப்பு உட்பட பல இடங்களில் இரண்டாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரம் இல்லை. குடிநீர் கிடைக்கவில்லை. வீடுகளுக்குள் கழிவுநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீரை வெளியேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் புகார் கூறினர்.

