வெள்ளம் காரணமாக திமுக இளைஞரணி மாநாடு தள்ளிவைப்பு

1 mins read
b3f0ca29-bf33-4027-917a-720b61d9514c
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞரணி மாநாடு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டை பிரம்மாண்ட முறையில் நடத்த தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.

அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில்தான் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டை சேலத்தில் நடத்துவதன் மூலம் திமுகவை கொங்கு பகுதியிலும் பலப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

அதோடு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய பிரசாரக் களமாகவும் இந்த மாநாட்டை பயன்படுத்த திமுக முயலுகிறது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளதால் அதற்கான நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனால், மக்கள் அவதிப்படும் நேரத்தில் திமுக இளைஞர் அணி மாநாட்டை நடத்துவது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து சேலத்தில் 17ஆம் தேதி நடைபெற இருந்த மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதிக்கு பதிலாக ஒரு வாரம் கழித்து டிசம்பர் 24ஆம் தேதியன்று மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்