சென்னை: புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரத்தில் ‘டோக்கன்’ கொடுக்கப்பட்டு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திருப்புகழ் ஐஏஎஸ் அறிவுறுத்தல்படி செய்யப்பட்டதால்தான் மழைநீர் தேக்கம் அதிகம் இல்லை.
“இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது.
“முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதிக்கான டோக்கன் ஒரு வாரத்தில் கொடுக்கப்பட்டு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும்.
“இந்த நிவாரணத் தொகையைப் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
“தற்போது சென்னை நிலவரம் மோசமாக உள்ள நிலையில், கார் பந்தயம் வேண்டாம் என ஒத்தி வைத்துள்ளோம். கார் பந்தயம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்,” என உதயநிதி தெரிவித்துள்ளார்.

