சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வழங்கப்பட உள்ள ரூ.6,000 வெள்ள நிவாரண நிதியை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வுக்காக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, வெள்ள நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுவதால் ஒரு வாரமாக மக்களால் வேலைக்குச் செல்ல இயலவில்லை.
வெள்ளப் பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு முறையாகப் பின்பற்றாததால் பொதுமக்ககள் தங்களது உடமைகளை இழந்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்தி அரசு செலவில் அவற்றை பழுது நீக்கி தர வேண்டும்.
மணலி, எர்ணாவூர், பகுதிகளில் எண்ணெய்க் கழிவால் பாதித்த மக்களுக்கு கூடுதலாக ரூ.25,000 நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் துறைமுகம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று நிவாரணப் பொருள் களை வழங்கினார்.
முன்னதாக அவர் திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் கூறியபோது, “வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை முதல்வர் அலட்சியப்படுத்தி மெத்தனமாக இருந்ததால், சென்னையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர். திமுக அரசு மக்களுக்கு சரியாக உதவவில்லை.மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்களவை தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
கோவளம், அடையாறு, கொசஸ்தலை ஆகிய 3 ஆறுகளைசுத்தப்படுத்தி, 2 ஆயிரத்து 400 கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் 5 ஆண்டு திட்டத்தை அதிமுக கொண்டுவந்தது. அதில் 1220 கிமீ நீளத்துக்கு வடிகால் கட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதை கிடப்பில் போட்டுவிட்டு, தங்கள் பணியை சரியாக செய்யாமல் இப்போது எங்களை குறை கூறுகின்றனர் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

