சென்னை: எண்ணெய்க் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடசென்னை பகுதி மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப் படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சுற்றுச்சூழல் அதிகாரிகளும் தலைமைச் செயலாளரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
“மேலும் தனிக்குழு ஒன்றும் ஆய்வு மேற்கொள்கிறது. எண்ணெய் பாதிப்பைத் தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கூடுதல் நிவாரணத் தொகை அளிக்கப்படும்,” என்றார் ஆணையர் ராதாகிருஷ்ணன்.
எண்ணெய்க் கசிவுடன் கடலில் கலந்த மழை நீரால் கடல் வளம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடலில் கலந்து விட்ட எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோரக் காவல் படை ஈடுபட்டுள்ளது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள காவல்படையினர் மூன்று ஹெலிகாப்டர்கள் மூலம் சுமார் மூன்று மணி நேரத்திற்கு வேதிப் பொருள்களுடன் கூடிய பொடியைக் கடலில் தூவினர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஏறக்குறைய பத்து டன் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.