சென்னை: மிச்சாங் புயலால் பெரும் சேதங்களைச் சந்தித்துள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வரும் மத்திய குழு இரண்டு நாள்களுக்கு ஆய்வுப்பணியில் ஈடுபடும் என தமிழக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் ஆய்வுக் குழுவில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், மத்திய வேளாண், உழவர் நலத்துறை, நிதித்துறை, மின்சாரத் துறை, சாலைப் போக்குவரத்து, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இன்று காலை முதல் மத்திய குழு தனது ஆய்வை தொடங்கும் எனத் தெரிகிறது.
மிச்சாங் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வர மத்திய அரசிடம் முதற்கட்டமாக 5,060 கோடி நிவாரண நிதி கேட்டுள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்து வெள்ள சேதங்களைப் பார்வையிட்டார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தமிழகம் எதிர்கொண்ட சேதங்களில் இருந்து மீண்டுவர 5,000 கோடி ரூபாய் நிதியை விரைவாக வழங்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். மேலும், சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்கவும் முதல்வர் வலியுறுத்தினார்.
அதன்படி மத்திய அரசின் குழு சென்னைக்கு வருகை மேற்கொண்டு இரு நாள்களுக்கு ஆய்வு மேற்கொள்கிறது.
“முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை மத்திய குழு சந்திக்கும். அப்போது அளிக்கப்படும் விவரங்களை முன்நிறுத்தி அக்குழு ஆய்வு மேற்கொள்ளும்.
“பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் செல்லும் மத்திய குழு துறைவாரியாக எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“மத்திய குழுவின் ஆய்வு செவ்வாய், புதன்கிழமை என இரு நாள்களுக்கு நீடிக்கும். பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை அக்குழு சந்திக்க உள்ளது. இறுதியாக, தனது ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்க உள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு அடுத்த கட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கும்,” என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.6,000 நிவாரணத் தொகை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

