சென்னை: சென்னையின் புறநகர்ப் பகுதியான மணலியில் இயங்கி வரும் சிபிசிஎல் (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்) சுத்திகரிப்பு ஆலையில் சனிக்கிழமை அன்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு உடனடியாக தீயணைப்பு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
எண்ணெய்க் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
விபத்துப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
இந்த சுத்திகரிப்பு ஆலையில் சேகரிக்கப்படும் கழிவுகள் காரணமாக அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
எனினும் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தை அடுத்து ஒட்டுமொத்த மணலி பகுதியையும் இருள் சூழ்ந்ததே பொதுமக்கள் அச்சமடையக் காரணம் எனத் தெரிகிறது. தீயணைப்புப் பணியில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இதற்கிடையே, வடசென்னையின் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 48 டன் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பணியில் தமிழக அரசுடன் மும்பையைச் சேர்ந்த ‘சீ கேர் மெரைன் சர்வீஸஸ்’ என்ற நிறுவனம் கைகோர்த்துள்ளது.
சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய்க் கழிவுகள்தான் அண்மையில் கொசஸ்தலை ஆற்றில் கலந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.