இதுவரை நிரம்பாத ஆயன்குளம் அதிசயக் கிணறு நிரம்பியது

1 mins read
d4636a05-d8a2-4220-bdf1-3dce921b6c23
ஆயன்குளத்தில் உள்ள இந்த அதிசயக் கிணற்றுக்குள் பல பக்கங்களில் இருந்து வெள்ள நீரைத் திருப்பிவிட்டாலும் அது நிரம்புவதே இல்லை. - படம்: தமிழக ஊடகம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாபெரும் வெள்ளத்தையும் உள்வாங்கும் ஆற்றல் கொண்ட ஆயன்குளம் அதிசயக் கிணற்றில் முதல்முறையாக நீர் வேகமாக நிரம்பியுள்ள சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிணற்றின் சுவர் இடிந்து மண் விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டு நிரம்பியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு நாள்களாக திருநெல்வேலியில் கனமழை வெளுத்து வாங்கிய போதிலும் ஆயன்குளத்தில் உள்ள அதிசயக் கிணறு திங்கள்கிழமை வரை நிரம்பாமல் இருந்து வந்த நிலையில் இப்போது நிரம்பியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, ஆயன்குளம் பகுதியில் உள்ளது அதிசயக் கிணறு ஒன்று. அதற்குள் பல்லாயிரம் கன அடி வெள்ள நீரைத் திருப்பிவிட்டாலும் நிரம்பி வழியாமல் சர்வ சாதாரணமாக நீரை உள்வாங்கிக்கொண்டே இருந்து வந்தது மீண்டும் பேசுபொருளானது.

2022ல் பெருமழையால் பெருக்கெடுத்த வெள்ளம் கிணற்றுக்குள் பாய்ச்சப்பட்டபோதும் கிணறு நிரம்பாமல் இருந்தது.

இதுகுறித்து ஐஐடி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் நடத்திய ஆய்வில், கிணறு சுண்ணாம்புப் பாறைகளால் உருவாகி இருப்பது தெரிய வந்தது.

சுண்ணாம்புப் பாறையில் துளைகள் பெரிதாகி, 50 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர்வழிப்பாதை உருவாகியிருப்பதால், கிணறு நிறைவதில்லை எனவும் கண்டறியப்பட்டது.

தற்போது ஆயன்குளம் அதிசய கிணற்றுக்குள்ளும் பல ஆயிரம் கன அடிநீர் திருப்பிவிடப்படுகிறது. எனினும், திங்கள்கிழமை வரை நிரம்பாத கிணறு நேற்று செவ்வாய்க்கிழமை நிரம்பி அதிசயிக்க வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்