‘வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகிவிட்டது’

‘வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகிவிட்டது’

2 mins read
ea49b38a-5fdc-4e38-863c-3daf326b6ecd
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தென் மாவட்டங்களில் பெருமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்துக் கூறவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகிவிட்டது என செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறை கூறினார்.

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை விடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் தொடர்பான தகவல்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி தென் மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது என்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உடனடியாக மின்சாரம் வழங்கினால் விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தற்போது ஹெலிகாப்டர்கள் மூலம் 13,500 கிலோ உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

“தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புள்ள பகுதிகளில் விமானப்படை, கடற்படை மூலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார் சிவ்தாஸ் மீனா.

மழை, வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகியுள்ள தென் மாவட்டங்களில் இதுவரை பத்துப் பேர் பலியாகியுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நீடிக்கும் என்றார்.

“பெருமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்துச் சொல்லவில்லை. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகியுள்ளது.

“கணிப்பு சரியாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதற்கு ஏற்ப சரியாக இருந்திருக்கும்,” என்றார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.

குறிப்புச் சொற்கள்