தூத்துக்குடி: வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி கன மழை பெய்யத் தொடங்கியது. 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத அளவில் அம்மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை விட்டும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் வடியாத நிலையே உள்ளதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முகாம்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கட், பால், ரொட்டி உள்ளிட்டவற்றை அரசு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். அவர்களுடன் ஏராளமான தன்னார்வலர்களும் தொண்டூழிய அமைப்புகளைச் சேர்ந்தோரும் இணைந்து மக்களை மீட்கும் பணியிலும் நிவாரணப் பொருள், உணவு ஆகியவற்றை விநியோகிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சாலைகள் துண்டிப்பால் கிராமங்களில் இருந்து வெளியே செல்லமுடியாமல் சிக்கித் தவிக்கும் மக்களுக்கும் சமையல் செய்து உணவுகளை பொட்டலங்களாக தன்னார்வலர்கள் எடுத்துச்சென்று விநியோகிக்கின்றனர். நாள்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.
அத்துடன் தன்னார்வலர்கள் வாட்ஸ்-அப் குழு ஒன்றைத் தொடங்கி உள்ளனர். அதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

