ஸ்ரீவைகுண்டம்: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்கள் அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குடியிருப்புகளில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை இப்போது திரும்பி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியக் கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் நிவாரணப் பொருள்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் பாதிப்புக்கு ஆளான ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டும் 3.2 டன் நிவாரணப் பொருள்கள் இந்தியக் கடற்படை சார்பில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரணப் பொருள்களைப் பொதுமக்கள் பலரும் லாவகமாகப் பிடித்துக்கொண்டனர்.
அதே பகுதியில், அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட முதியவர் ஒருவரையும் கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் மீட்டு அவர்களைச் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்களையும் வெள்ள பாதிப்பு பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக, தூத்துக்குடியில் மழை ஓய்ந்து ஐந்து நாள்கள் ஆகியும் இன்னும் பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் ஆபத்தான அளவுக்கு தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால் யாரும் கிராமங்களுக்குள் நுழையமுடியாத சூழல் உள்ளது.
ஏறக்குறைய 154 ராணுவ வீரர்கள் களத்தில் உள்ளனர். அத்துடன், பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ராணுவ வீரர்கள் சிறு சிறு ரப்பர் படகுகளில் உணவு, தண்ணீரைக் கொண்டுசென்று கிராமங்களில் விநியோகித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் ஆபத்தான இடங்களில் கயிற்றைக் கட்டிக்கொண்டு உயிரைப் பணயம் வைத்து உதவிக்கரம் நீட்டி வருவதை பொதுமக்கள் பாராட்டுகிறார்கள்.
கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த நான்கு ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து உணவு விநியோகித்து வருகின்றன.
ஹெலிகாப்டர் சத்தம் கேட்டவுடன் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிக்கு வந்து விடுகின்றனர். ஹெலிகாப்டர்களைத் தாழ்வாகப் பறக்கச்செய்து அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வீரர்கள் போட்டு வருகிறார்கள்.

