சென்னை: தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த நான்கு மாவட்ட மாணவர்களுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ் நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையத்தளம் வாயிலாக அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவர்கள் www.mycertificates.in என்ற இணையத்தளம் வாயிலாக நகல்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ் நகல் கட்டணமின்றி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் தாங்கள் படித்து வரும் பள்ளிகளில் உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து கட்டணமின்றி நகல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


