தென்காசியில் 228 கிராமங்களில் 18,000 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு

தென்காசியில் 228 கிராமங்களில் 18,000 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு

1 mins read
be17336e-3cdc-4b63-98c9-7d74383f473a
குருவி குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். - படம்: தமிழக ஊடகம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்கள் சேதமடைந்தன.

குருவி குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், தென்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார், சங்கரன் கோவில் தொகுதி எம்எல்ஏ ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் இதுவரை 228 கிராமங்களில் மழை ஏற்படுத்திய சேதங்கள் ஆய்வு செய்யப் பட்டுள்ளன. 18,077 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 16 கோடி ஆகும். இதனால் 25,089 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மழையால் உயிரிழப்பு இல்லை. 2 பேர் காயமடைந்தனர். 5 ஆடு, மாடுகள், 4,800 கோழிகள் உயிரிழந்துள்ளன. 92 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன.

200 வீடுகளில் சில பகுதிகள் இடிந்துள்ளன. எந்த ஒரு விவசாய நிலங்களும் கணக்கெடுப்பில் விடுபடாமல் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்த்து, விவசாயிகளைச் சந்தித்து வருகிறோம். விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்