மதுரை: தமிழகத்துக்கு பேரிடர் நிதியை ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவித்து, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடி நிதி வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதி பதிகள், நாட்டு மக்கள் அனைவரையும் இந்தியர்களாகவும் குடிமக்களாகவும் மத்திய அரசு சமமாகப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
“அனைவரும் சட்டப்பேரவை, மக்களவைக்கான பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர்.
“அவர் களிடம் உயிர் மட்டுமே மிஞ்சியுள்ளது. இதனால் பாரபட்சம் பார்க்காமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.
“மனு தொடர்பாக மத்திய அரசு விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

