தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடப்பு ஆண்டில் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

2 mins read
c1c15d65-1297-4e8c-809a-366964603f93
நிர்மலா சீதாராமன். - படம்: ஊடகம்

சென்னை: நடப்பாண்டில் சிறு தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளியல் மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்த வண்ணம் உள்ளது என்றும் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“தற்போது உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தரச்சான்று அளிக்கப்பட்ட இந்தத் தளவாடங்களை நமது பாதுகாப்பு அமைச்சும் வாங்குகிறது.

“நடப்பு நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதங்களில் இதை 24 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து ராணுவத் தளவாடப் பொருள்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அனைத்துலக அளவில் இந்திய ரூபாயைப் பயன்படுத்தும் நிலையை உருவாக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதற்கட்டமாக ரஷ்யா, இலங்கையுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் மின்னிலக்க பணப் பரிவர்த்தனை அதிகளவில் நடந்து வருவதாகவும் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதவாறு தொடங்கப்பட்ட ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகள் மூலம் சாதாரண மக்கள் சிறுகச் சிறுக சேமித்த தொகை ரூ.2.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்