‘உயர்கல்விப் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு’

2 mins read
4d702b26-1acb-482c-9f30-5e8a3e488c33
பாரதிதாசன் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: “உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடும் திகழ்கின்றன,” என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

எனது கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கும், 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, அனைத்துத் தரப்பு மாணவர்களும் தொழிற்கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவை எல்லாமே தமிழ்நாட்டின் மாணவர் சக்தியை அடுத்தகட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் முயற்சிகள்தாம். இன்றைக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம், உலகப் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலிலும், தேசிய தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்தப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சிலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள், தமிழ் மையம் ஆகிய அனைத்தையும் தொடங்கியது திராவிட மாடல் அரசுதான்.

இந்தியாவின் தலைசிறந்த 100 கலை - அறிவியல் கல்லூரிகளாக தேசிய தரவரிசையில் உள்ள 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 15 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் 146 கல்வி நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளது. இப்படி உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடும் திகழ்கிறது.

கல்வியில் சமூகநீதியையும், புதுமைகளையும் புகுத்துவதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அத்தகைய பல்கலைக்கழகங்களுக்கே சிறப்பான எதிர்காலம் உண்டு,” என்று பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்