துணை முதல்வர் உதயநிதி என்பது வெறும் வதந்தி: ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி என்பது வெறும் வதந்தி: ஸ்டாலின்

1 mins read
4f3b0407-8758-4cc2-8fe1-0f5bed5582e1
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமது வெளிநாட்டுப் பயணத்தையொட்டி, அமைச்சர் உதயநிதி தமிழகத் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்ள இருப்பதாக வெளியான தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்த பரபரப்புக்காக, துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர்.

“அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன்.

“அதேபோல் எல்லா அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம் என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார் அமைச்சர் உதயநிதி,” என்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்க இருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் தனது மகனுக்குத் துணை முதல்வர் பதவியை அளிப்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்