800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் சிறப்பாக நடந்தேறிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் சிறப்பாக நடந்தேறிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

படம்: ஏஎஃப்பி

17 Jan 2024 - 7:47 pm

2 mins read

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடந்தேறியது.

தமிழக அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியைப் புதன்கிழமை காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

காலை முதல் மாலை வரை பல்வேறு சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை அமைச்சர் உதயநிதி வழங்கியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு உடல்தகுதிப் பரிசோதனை செய்த பிறகே களத்திற்குள் இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மருத்துவக் காரணங்களுக்காக ஏழு மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடந்து முடிந்துள்ளன. இதனால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் போட்டி தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் கடைப்பிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாடு முட்டியதில் சிறுவன் உட்பட இருவர் பலி

சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பாஸ்கர் என்ற 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மஞ்சுவிரட்டுக்கு அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டியதில் அச்சிறுவன் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

அடையாளம் தெரியாத மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும், காளைகள் முட்டியதில் 75 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்