சென்னை: தமிழகத்திற்கு 3.99 டி.எம்.சி. தண்ணீரைக் காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனவரி 19ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் இந்த நடவடிக்கையை கர்நாடகா மேற்கொள்ள வேண்டும் எனக் காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தி உள்ளது.
முந்தைய உத்தரவுகளின்படி, ஜனவரி மாதம் 2.76 டி.எம்.சி, பிப்ரவரியில் 2.5 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தந்திருக்க வேண்டும்.
இதை கவனத்தில் கொண்டு கர்நாடக அரசு தண்ணீரை விரைவாக வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 600 கன அடி வீதம் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.