தேர்தல் தொகுதிப் பங்கீடு: திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை

தேர்தல் தொகுதிப் பங்கீடு: திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை

2 mins read
2cd82939-5388-447b-8570-2f4e42110fb0
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக - காங்கிரஸ் தலைவர்கள். - படம்: ஊடகம்

சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் தொகுதிப் பங்கீடு குறித்து ஞாயிற்றுக்கிழமை பேச்சு வார்த்தை நடத்தின.

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நியமித்துள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழ் நாட்டின் பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மாநிலத் தேர்தல் குழுவினருடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி கருத்துகளைக் கேட்டறிந்தனர். அப்போது, காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் மூன்று தனித் தொகுதிகளில் போட்டியிட வேண்டும். திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், அஜோய், கே.எஸ்.அழகிரி, கு.செல்வப் பெருந்தகை ஆகியோர் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்களைச் சந்தித்தனர்.

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் 15 தொகுதிகள் கேட்டனர் என்றும், புதுச்சேரி உட்பட 7 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவித்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும், தங்கள் தலைவர்களுடன் கலந்துபேசி, அதன் விவரங்களை அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, பேச்சுவார்த்தை மிகவும்திருப்திகரமாக இருந்தது. மேற்கொண்டு பேச வேண்டிய விஷயங்களை வெகு விரைவில் பேசுவோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

முகுல் வாஸ்னிக் பேசும்போது, இந்தக் கூட்டத்தில் மக்களாட்சிக்கு ஆபத்தானவற்றை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். எங்களின் அடுத்த கூட்டத்தில் இரு தொகுதிப் பங்கீடு குறித்து பேசவுள்ளோம். இந்நிலையில் இண்டியா கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறினாலும், கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றனர் என்றார்.

திமுக சார்பில் பேசிய பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, இது ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைதான். வரும் 9ஆம் தேதி நடைபெறும் மக்களவைக் கூட்டத் தொடருக்குப் பின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும்.

நிதிஷ் குமார் பற்றிய பேசிய டி.ஆர்.பாலு, நிதிஷ் குமார் தொடக்கத்தில் இருந்த இண்டியா கூட்டணியில் பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டுதான் இருந்தார். கூட்டணிக்காக அதையெல்லாம் சகிக்க வேண்டியிருந்தது. இப்போது அவர், இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறியதால் எங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்