பழனி கோவில் வழக்கு: தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முத்தரசன் வலியுறுத்து

பழனி கோவில் வழக்கு: தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முத்தரசன் வலியுறுத்து

கோப்புப்படம்: ஊடகம்

01 Feb 2024 - 8:15 pm

1 mins read

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை (30.01.2024) இந்து சமய கோவில்களில் இந்து சமயம் சாராதவர்களை அனுமதிக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது தமிழ்நாட்டில் சமய எல்லைகள் கடந்து அனைத்து சமய நம்பிக்கைகளையும் சமமாக கருதியும், மதித்தும் வருகிற நல்லிணக்கப் பண்புக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகூர் தர்க்காவிற்கும், அன்னை வேளாங்கன்னி தேவாலயத்திற்கும், பழனி திருக்கோவிலுக்கும், அனைத்து சமய நம்பிக்கை உள்ளவர்களும் சென்று வருவது வழிவழியான பழக்கமாக உள்ளது. இதன் மூலம் சமய வழிகள் வேறுபட்டாலும் எல்லா சமயங்களும் அன்பு, கருணை, இரக்கம், சகிப்புத் தன்மை என நல்லிணக்க உணர்வைத்தான் போதிக்கின்றன.

இந்த ஆன்மிக வரலாற்று மரபுகளைக் கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு சமூகத்தில் பகைமை வளர்க்கும் பிளவு சக்திகளை ஊக்கப்படுத்தும் பேராபத்தானது.

எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இத்தீர்ப்பை வழங்கிய நீதியரசர் மறுபரிசீலனை செய்து தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதுடன் இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு அரசும் இத்தீர்ப்பை செயல் இழக்க செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்