விவசாய நிலத்தில் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருள்கள் கண்டெடுப்பு

1 mins read
5e719a75-ed4a-4108-bcab-454b9680652b
விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள். - படம்: ஊடகம்

திருப்பத்தூர்: விவசாய நிலத்திற்கு தண்ணீர்க் குழாய் பொருத்த பள்ளம் தோண்டியபோது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நிலத்தில் தண்ணீர்க் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக கடந்த புதன்கிழமையன்று பள்ளம் தோண்டியபோது சிறிய அளவிலான கொப்பரைகள், மண் பாத்திரங்கள், கறுப்பு, சிவப்பு நிறத்திலான மண் பாண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கிடைத்தன.

இது குறித்து திருப்பத்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவரும் தொல்லியல் ஆய்வாளர் பிரபுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பொருள்களைப் பார்வையிட்டனர். அவை அனைத்துமே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருள்களாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர் பிரபு தெரிவித்துள்ளார்.

“அக்காலகட்டத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிர் இழக்கும்போது நிலத்திற்கு அடியில் அடக்கம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது இறந்தவர் பயன்படுத்திய பொருள்களையும் உடன் வைத்து அடக்கம் செய்வர்.

“அந்த வகையில் தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களும் இறுதிச் சடங்கின்போது புதைக்கப்பட்டவையாக இருக்கக்கூடும்,” என்று தொல்லியல் ஆய்வாளர் பிரபு தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் தொல்லியல் துறை இப்பகுதியில் முறையான அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் பல அரிய தகவல்களும் பொருள்களும் வெளிவர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்