கதாநாயகனாக மாறிய ‘கூகல் மேப்ஸ்’

கதாநாயகனாக மாறிய ‘கூகல் மேப்ஸ்’

2 mins read
f0882189-25c2-4131-8580-bb37d92a95f8
தந்தையின் கைப்பேசியைத் திருடியவனை மகன் ‘கூகல் மேப்ஸ்’ உதவியுடன் பிடிக்க முயன்றான். - படம்: இணையம்

சென்னை: சிலர் ‘கூகல் மேப்ஸ்’ காட்டிய வழியில் சென்று துரதிருஷ்டவசமான சூழல்களில் சிக்கியதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தில் கைகொடுத்த ஒன்றாக மாறியுள்ளது ‘கூகல் மேப்ஸ்’.

ராஜ் பகத் என்ற இளையர், தன் தந்தையின் கைப்பேசியைத் திருடியவனைப் பிடிப்பதற்காக கூகல் மேப்சின் ‘லொகேஷன் ஷேரிங்’ அம்சத்தைப் பயன்படுத்தினார்.

நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்குச் சென்று கொண்டிருந்த பெரியவர், கூட்டமே இல்லாத ரயிலில் தன் பையையும் கைப்பேசியையும் இழந்தார்.

திருடிய ஆடவர் திருநெல்வேலிச் சந்திப்பில் இறங்கிவிட்டார்.

இதையடுத்து, திருட்டு குறித்து தன் தந்தையின் நண்பரிடமிருந்து இளையருக்கு அழைப்பு வந்தது.

நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ‘லொகேஷன் ஷேரிங்’ அம்சம் செயல்படுத்தப்பட்டதால் கைப்பேசி இருந்த இடத்தை ராஜ் பகத்தால் கண்டுபிடிக்க முடிந்தது.

அவ்வாறு ஆராய்ந்ததில் திருடன் இன்னொரு ரயிலில் மீண்டும் நாகர்கோவில் செல்வதை இளையர் கண்டுபிடித்தார்.

உடனே, இளையர் தன் நண்பருடன் காவல்துறை உதவியை நாடினார்.

ரயில் நிலையத்திற்கு அனைவரும் சேர்ந்து சென்றனர். எதிர்பார்த்ததுபோல திருடன் வந்திறங்கினான்.

அப்படி இருந்தும் கூட்டத்தில் திருடன் சற்று காணாமல் போய்விட்டான். மீண்டும் அதே ‘லொகேஷன் ஷேரிங்’ அம்சத்தைக் கொண்டு பேருந்து நிறுத்தம் ஒன்றுக்குச் சென்றனர்.

அங்கு அக்கம்பக்கம் இருந்தோரின் உதவியுடன் அபகரித்த பொருள்களை வைத்திருந்த திருடன் பிடிபட்டான்.

“இருக்கும் இடத்தைப் பிறருக்குத் தெரியப்படுத்துவதைப் பலர் விரும்புவதில்லை. ஆனால், அதற்கான அம்சம்தான் நமக்கு உதவியுள்ளது,” என்று இளையர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்