சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு குறைந்த முக்கியத்துவம் தருவதாக மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசினார்.
அப்போது அவர், “முக்கியமான விவகாரத்தைப் பற்றிப் பேச எனக்கு ஒருவழியாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டின் பிரச்சினை குறித்துப் பேசும்போது மூத்த அமைச்சர்கள் யாரும் இங்கு இல்லை. பின் நான் யாரிடம் முறையிடுவேன்?
வெள்ள நிவாரண நிதி தொடர்பாக தமிழகத்தின் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தோம். நிச்சயம் தமிழ் நாட்டிற்கு உதவுவோம் என்று உறுதி அளித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தபோது, ஜனவரி 27ஆம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். ஆனால் இன்று வரை அதுகுறித்து மத்திய அமைச்சரிடம் இருந்து எங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை.
தமிழ் நாட்டிற்கு நெருக்கடி நேரத்தில் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்குக் கூட மத்திய அரசு தயாராக இல்லை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இப்போதாவது மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்,” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

