மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம்

2 mins read
6fab04f3-090f-43ef-8975-8d7fe0712a78
சென்னை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அல்வா பொட்டலம் கொடுக்கும் திமுகவினர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மிச்சாங் புயலால் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து அம்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தமிழக வெள்ளப் பாதிப்பை பார்வையிட மத்திய குழுவும் சென்னை மற்றும் தூத்துக்குடி வந்தது. இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது தமிழக அரசு சார்பாக புயல் மற்றும் வெள்ள பாதிப்பு சேதங்களை சரிசெய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு 37,000 கோடி ரூபாயைக் கோரியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வெள்ள நிவாரண நிதி கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினர். இருப்பினும் மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லையென தி.மு.க. அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத்திலும் மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை பதிவு செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்காத மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், துண்டுப் பிரசுரத்தோடு தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர். மத்திய அரசின் செயல்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தி.மு.க. சார்பாக அல்வா கொடுக்கும் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் வரும் பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்டவர்களுக்கு அல்வா வழங்கினர்.

அல்வாவோடு இணைக்கப்பட்ட துண்டு அறிவிப்பில் ‘மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ஜீரோ’ என அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைத்து வழங்கி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திமுகபோராட்டம்

தொடர்புடைய செய்திகள்