சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் என அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘ஒருங்கிணைப்பு அறைகள்’ அமைக்கப்பட்டுள்ளன. பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள பல்வேறு துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன.
மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் திமுக கட்சித் தலைமை ஏற்கெனவே மூன்று குழுக்களை அமைத்துள்ளது. அக்குழு பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இதையடுத்து திமுக தலைமை, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள ‘ஒருங்கிணைப்பு அறைகள்’ அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கான செயல் உறுப்பினர்களின் பெயர்களையும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார். திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தேர்தல் வியூகமாக, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.