தமிழ் வளர்ச்சியில் அரசின் நடவடிக்கை திருப்தியளிக்கிறது: உயர் நீதிமன்றம்

2 mins read
62873f44-f550-4d70-a4bc-3fbeae62f3db
சென்னை உயர் நீதிமன்றம் - படம்: இணையம்

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தியளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் கனகராஜ், ‘தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆய்வுகள் நடத்த அறிஞர் குழுவை அமைக்க வேண்டும். தமிழக அரசு அரசாணையை தமிழில் வெளியிட வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பிப்ரவரி 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு முதன்மை அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதாகவும், தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் இவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும் தமிழ் ஆராய்ச்சிக்காக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டு 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது, கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களைத் தமிழில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது போன்றவற்றையும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் ஆராய்ச்சிக்கென 1971ஆம் ஆண்டிலேயே தமிழ் மொழி வளர்ச்சி இயக்குநரகம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள், நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், தமிழ் வளர்ச்சித் துறையில் 2019-2020ஆம் ஆண்டில், 70 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 65 கோடியே 48 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், 2020-2021ஆம் ஆண்டில் 63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 53 கோடியே 86 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்