சென்னை: நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை சென்னை அருகே பனையூரில் நடைபெற்றது.
கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க கட்சி திட்டமிடுகிறது.
உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதுதான் முதல் கட்டப்பணி. தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட, சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும் என்று கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள், மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது.

