மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

படம்: ஊடகம்

23 Feb 2024 - 9:31 pm

1 mins read

சென்னை: புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், அக்கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குமாறு அவர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது.

கட்சி ரீதியாக நூறு மாவட்டங்களை உருவாக்கவும் அவற்றுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்துவது என்ற முடிவுக்கு நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் மாதம் இந்த மாநாட்டை நடத்த விஜய் விரும்புகிறார் என்றும் மாநாட்டில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கட்சி நிர்வாகிகள் ஆரவாரமின்றி ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் கட்சிப் பணியாற்றுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்