துபாய் செல்லவிருந்த பெண்ணிடம் 68 ‘சிம்’ அட்டைகள்: பயணத்தை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள்

2 mins read
0117f958-d6da-43e6-9978-ac4db243c57b
சென்னை விமான நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: துபாய் செல்லவிருந்த பெண்ணிடம் இருந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் 68 கைப்பேசி ‘சிம்’ அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

அதிக எண்ணிக்கையில் ‘சிம்’ அட்டைகளை வைத்து இருந்ததால் சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் அந்தப் பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த ரோஜா (40 வயது) என்பது தெரிய வந்தது. வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக துபாய் செல்வதாக அவர் தெரிவித்தார்.

புதன்கிழமை அன்று துபாய் செல்லும் விமானத்தில் ரோஜா பயணம் மேற்கொள்ள இருந்தார். அவரது கடப்பிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில், வழக்கத்திற்கு மாறாக 68 ‘சிம்’ அட்டைகளை அவர் வைத்திருப்பது தெரிய வந்தது.

இந்த ‘சிம்’ அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

விசாரணையின்போது துபாயில் பணிபுரியும் தனது மருமகனுக்கு வழங்க தனது சகோதரர் இந்த ‘சிம்’ அட்டைகள் கொடுத்ததாக ரோஜா கூறினார். இதையடுத்து அதிகாரிகள் துபாயில் உள்ள அவரது சகோதரரை தொடர்பு கொண்டனர்.

இணைய சூதாட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இந்த ‘சிம்’ அட்டைகளை விற்கத் திட்டமிட்டு இருந்ததாக ரோஜாவின் சகோதரர் கூறினார். மேலும் ஒரு ‘சிம்’ அட்டைக்கு 400 ரூபாய் அளித்து அவற்றை வாங்கியதாகவும் ஒப்புக்கொண்டார்.

‘சிம்’ அட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்ய இடமில்லை என்றும் ரோஜா மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்