ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
82b37e10-81da-40e4-80a6-84b2059bd4af
ஐ.பெரியசாமி. - படம்: ஊடகம்

சென்னை: முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் ஐ.பெரியசாமி.

அப்போது வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

அதன் பின்னர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

பின்னர் ஐ.பெரியசாமியை விடுவிப்பதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.

பின்னர் தாமாக முன்வந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டார்.

இதனால் திமுக வட்டாரங்களில் கடும் அதிருப்தி நிலவியது. கடந்த 13ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததாகத் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் இந்த முறைகேடு வழக்கை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

நாள்தோறும் விசாரணை நடத்தி வரும் ஜூலை மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 28ஆம் தேதிக்குள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு லட்சம் ரூபாயை பிணைத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு முன்னிலை ஆகவில்லை எனில் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

ஏற்கெனவே திமுக அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒரு அமைச்சருக்கு சட்ட ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்