பாலாற்றில் புதிய தடுப்பணை: கொந்தளிப்பில் தமிழகம்

பாலாற்றில் புதிய தடுப்பணை: கொந்தளிப்பில் தமிழகம்

2 mins read
89e9ba09-c0a3-4074-84d3-1fd44b5fa9ff
புதிய தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. - படம்: ஊடகம்

சென்னை: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கி உள்ளதை அடுத்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவின் இந்த நடவடிக்கையைத் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

ஏற்கெனவே விவசாயிகள் ஆந்திர அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், போராட்டம் மேலும் தீவிரமடையும் என அந்த விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது எதிர்காலத்தில் சிக்கலை மேலும் பெரிதாக்கிவிடும் என்றும் தென் மாவட்ட விவசாய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் கலந்துகொண்டார்.

இதற்கிடையே, ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே மூன்று தடுப்பணைகளும் ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு அணை கட்டப்படுவதை ஏற்க இயலாது,” என வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழக உரிமை தாரைவார்க்கப்பட்டதா

பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளது என்றால் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்துவிட்டதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றில் புதிய அணை கட்டுவதென்பது பாலாற்றை பாசன ஆதாரமாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை எந்த வகையிலும் அனுமதிக்க இயலாது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திரம் கட்ட முயல்வது தொடர்பான சர்ச்சை 18 ஆண்டுகள் வரலாறு கொண்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை தமிழக அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்