சென்னை: பெரம்பலூர் மற்றும் சென்னை வடக்கு மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணாவுக்கு பதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகரும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரனுக்கு பதில் ஜெகதீசனும் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக அப்பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இளைய அருணா, திமுகவில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் தேர்தலில் கடும் போட்டிக்கு இடையில் கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்டவர்.
ஆனால், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தைச் சரியாக நடத்தாதது, சென்னை வடக்கு மாவட்டத்தின் கீழ்வரும் தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காதது உள்ளிட்ட காரணங்களால் அவர்மீது தலைமைக்குப் புகார் சென்றதாகவும், அதன்பேரில் அவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

