சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனு.
புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்துகொண்டன.
பேச்சுவார்த்தையின் முடிவில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுதிப் பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இரண்டு தொகுதிகளில் போட்டி என முடிவு செய்யப்பட்டாலும், எந்தெந்தத் தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இப்போதைக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்று மட்டும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திமுகவுடன் நடந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் முடிவில் தொகுதிப்பங்கீட்டில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீட்டுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சி சர்வாதிகார, பாசிச ஆட்சி.
“இந்த நாட்டை பாசிச பாதையில் அவர்கள் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி அரசியலமைப்பைக் காப்பாற்ற வேண்டும். இதனை உணர்ந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“அதனடிப்படையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. திமுகவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.
“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து பின்னர் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
“சென்ற முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதிக தொகுதிகள் கேட்டோம். எனினும், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்த உடன்பாடு செய்துகொண்டோம். எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை. திமுக கூட்டணிக்கு எந்த சிக்கலும் ஏற்படுத்த முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

