தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெயக்குமார்: தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக வெறும் பூஜ்ஜியம் தான்

2 mins read
016d753d-24c6-4f7b-a789-e87e0be94963
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை சார்ந்து பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல் செய்கிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்யம்தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மக்களவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். அதிமுக தலைவர்களின் முகங்களை பாஜக எதற்கு முன்னிலைப்படுத்த வேண்டும். இதற்கு பாஜக வெட்கப்பட வேண்டும்.

“பாஜக தலைமை மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையையே இது காட்டுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முகங்கள் அதிமுகவுக்குத்தான் சொந்தம், அவர்களின் முகங்களைக் காட்டி வாக்கு வாங்க நினைக்கும் அரசியலை பாஜக தற்போது கையில் எடுத்துள்ளது. இது கண்டனத்திற்குரிய செயலாகும்.

“திருச்சி மாநாட்டில் காலி நாற்காலிகளுக்கு இடையே அண்ணாமலை பேசுகிறார். டாஸ்மாக் காலி மதுப்புட்டிகளில்கூட காசு பார்க்கிற கட்சி திமுக. பிரதமர் மோடியின் வருகையால் தமிழ்நாட்டில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படப்போவதில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான். தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை சார்ந்தே பாஜக அரசியல் செய்து வருகிறது.

பாஜக பிரதானமாக தமிழ்நாட்டில் பேசு பொருள் கிடையாது. அதிமுகவை யாராலும் உருட்டவோ மிரட்டவோ முடியாது. அதிமுகவுக்கு என தனித்தன்மை உள்ளது, யாரையும் நம்பி இல்லை.

மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி, களத்தில் இல்லாத பாஜக என்ற கட்சியை பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அதிமுக கூட்டணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தால் வரவேற்போம். வராவிட்டாலும் கவலையில்லை. எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்