மதுரை: மதுரை மாவட்டம், தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பத்துத் தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது.
33 மாதங்களில் இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. இந்த மருத்துவமனை கட்டுமானத்துக்கு தேவையான ரூ.1,977.8 கோடி நிதியில் 82 விழுக்காட்டுத் தொகையான ரூ.1,627.70 கோடி ரூபாயை ஜெய்கா நிறுவனம் கடனாக வழங்குகிறது.
இந்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்கு 2019 ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், அதன்பிறகு சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக வேறெந்த கட்டுமானப் பணிகளும் அங்கு நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதன் கட்டுமானப் பணிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கின.

