உதயநிதியைப் பதவிநீக்கம் செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உதயநிதியைப் பதவிநீக்கம் செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

படம்: ஊடகம்

06 Mar 2024 - 7:14 pm

2 mins read

சென்னை: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரைப் பதவிநீக்கம் செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கிக் காய்ச்சல், மலேரியா, கொரோனா இதை எல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது; ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது,” எனக் கூறி இருந்தார்.

அந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றார். மேலும், திமுக எம்.பி. ஆ.ராசாவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசி இருந்தார்.

இந்தப் பேச்சுகளுக்கு எதிராக, எந்தத் தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்பியும் அவர்களை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் புதன்கிழமையன்று தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், “இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உகந்ததுதான். ஆனால், இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இந்து அறநிலையத்துறை இது போன்ற மாநாட்டில் கலந்து கொண்டிருக்கக்கூடாது,” என்று கூறினார்.

மேலும், உயர்பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதற்குமுன் அதிகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வரலாற்று நிகழ்வுகளைச் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்