நீலகிரி வட்டாரத்தில் ஒரே நாளில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

நீலகிரி வட்டாரத்தில் ஒரே நாளில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

1 mins read
9064becb-f8a3-4e2b-95ee-e3cab4957081
நீலகிரி வட்டாரத்தில் ஊருக்குள் நுழையும் யானைகளால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். - போப்புப்படம்: ஊடகம்

ஊட்டி: நீலகிரியில் குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை காட்டுவளத் துறையினர் கண்காணித்து அடர்ந்த காட்டுக்குள் விரட்டிவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மசினகுடியை அடுத்த மாயார் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி 51 வயது நாகராஜ், தனது வீட்டுக்கு வெளியே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது புதரில் மறைந்திருந்த யானை ஒன்று அவரைத் துரத்தத் தொடங்கியது. யானையிடம் இருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று உயிரைக் கையில் பிடித்து ஓடினார்.

ஆனால், யானை அவரை விடாமல் துரத்தியதில், துதிக்கையால் தூக்கிக் கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த மக்கள் காட்டுவளத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதேபோல் தேவர்சோலை சர்க்கார் மூலைப் பகுதியைச் சேர்ந்த மகாதேவ் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பும்போது ஒற்றை யானை அவரைக் கடுமையாகத் தாக்கியது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்.

நீலகிரியில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்