அதிமுக சின்னம் முடக்கப்படும் ஆபத்து: பழனிசாமி ஆலோசனை

1 mins read
0e9c4d85-3b9d-40dd-bb72-0e7c6f562cd1
இரட்டை இலை சின்னத்தை முடக்க இயலாது என அதிமுக நிர்வாகிகள் உறுதியாகக் கூறுகின்றனர். - படம்: ஊடகம்

சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவலை அடைந்துள்ளதாகவும் வழக்கறிஞர்களுடன் இதுகுறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஒரு வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாம் தாக்கல் செய்துள்ள வழக்கும் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே இவ்வாறு பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நாடாளுமன்றத் தேர்தலில் பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது எனவும் சூரியமூர்த்தி நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 25ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் சூரியமூர்த்தியின் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு பழனிச்சாமிக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அதிமுகவின் மூத்த வழக்கறிஞர்களுடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்றும் வரும் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் பழனிசாமி, அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்