தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாய தமிழ்ப் பாடம்: சீமான், ராமதாஸ் வலியுறுத்தல்

2 mins read
f816424c-8a09-40fc-9120-54034ed4eafe
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ் பாடம் தேர்வு எழுதுவதிலிருந்து திமுக அரசு விலக்கு அளித்துள்ளதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ் பாடம் தேர்வு எழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்மொழித் தேர்வு எழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டு 8 ஆண்டுகளாகியும் இன்று வரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், தமிழக அரசின் அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் பெற்று இயங்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகள், தமிழைக் கற்பிக்க மறுப்பதும், அதற்கு திமுக அரசு துணைபோவதும் தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். இதன் மூலம் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற வசனங்கள் எல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பது மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது.

ஆகவே, ‘தமிழ் வாழ்க’ என்று அரசு கட்டடங்களில் எழுதி வைத்தால் மட்டும் தமிழ்மொழி வாழாது, வளராது; அதற்கு அரசு சட்டங்களில் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழகத்தில் வாழும் மக்களின் இதயச் சுவரில் எழுத வேண்டும் என்பதை திமுக அரசு இனியாவது உணர்ந்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டம் குறித்த உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்