சென்னை: தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என, தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் இடம்பெறவில்லை.
கடந்த மாதம், தொழிலாளர் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்கள், அதிகாரிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், சென்னை தலைமை செயலகத்தில், தமிழில் பெயர்ப் பலகை வைப்பது குறித்து ஆலோசித்தனர். ஆனால், வணிகர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை.
“தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால், ஏப்ரலுக்குப் பின் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பதையும், அதன்பிறகும் வைக்காவிட்டால் வணிக நிறுவனங்களுக்கான உரிமத்தை ரத்து செய்வது குறித்தும் அரசு முடிவெடுத்துள்ளதை, தமிழ் வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வாயிலாக, மாவட்டந்தோறும் விளக்கி வருகிறோம்,” என்று தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.